கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா
கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா
கருணை உன் வடிவல்லவா
வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்
கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்
எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா
வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்
மனதீபம் நீ என்று அறியாமலே
அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்
அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2
தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன்
உணராத நிலை மாற்றுவாயோ
உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்
ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்
மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்
செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்
புவிமீது இசைஞானம் இழிவாகுமே
சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்
புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2
உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை
உண்டாக்கி அருள் வீசுவாயோ
தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்
இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்
நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்