Monday 11 February 2013

திருப்பலி செபங்கள் | Tamil Catholic Mass Prayers

திருப்பலியானது இரண்டு முக்கிய  வழிபாட்டு முறைளை உள்ளடக்கியது.

  1. இறைவாக்கு வழிபாடு
  2. நற்கருணை வழிபாடு

 1. இறைவாக்கு வழிபாடு

இறைவாக்கு வழிபாட்டு வருகை பவனி, தொடக்க வாழ்த்துரை, மனத்துயர் முயற்சி, வானவர் கீதம் (குறிப்பிட்ட நாட்களில் மட்டும்), சபை மன்றாட்டு, முதல் வாசகம், பதிலுரைப் பாடல், இரண்டாம் வாசகம் (ஞாயிறு மற்றும் பெருவிழா நாட்களில் மட்டும்), நற்செய்திக்கு முன் வசனம் (அல்லேலூயா), நற்செய்தி வாசகம், மறையுரை, விசுவாச அறிக்கை (ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் மட்டும்) மற்றும் இறைமக்கள் மன்றாட்டு போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது.

2. நற்கருணை வழிபாடு 

நற்கருணை வழிபாடு காணிக்கை மன்றாட்டு, நற்கருணை மன்றாட்டு, நற்கருணை எழுந்தேற்றம், இயேசு கற்பித்த செபம், சமாதான வாழ்த்து, நற்கருணைத் திருவிருந்து,  நன்றி மன்றாட்டு மற்றும் வாழ்த்து ஆசீர் போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது.

இறைவாக்கு வழிபாடு

  

வருகைப் பாடல்

 

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி

வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே - 2

மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் -வாராய்

மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே - 2
திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் -வாராய் 


குரு : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே
எல் : ஆமென்

குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக
எல் : உம்மோடும் இருப்பதாக

குரு : சகோதர சகோதரிகளே, திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும்பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்..

எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்போதும் கன்னியான தூய மரியாளையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை மன்னித்து நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல் : ஆமென்.

குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்

குரு : கிறிஸ்துவே இரக்கமாயிரும்
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்

குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்

வானவர் கீதம்

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக!
உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக!

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே! 
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே!

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்தேவ தந்தை இறைவனே!
ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே!

ஆண்டவராம் எம் இறைவனே! இறைவனின் திருச் செம்மறியே!
தந்தையினின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர்!

உலகின் பாவம் போக்குபவரே, நீர் எம்மீது இரங்குவீர்!
உலகின் பாவம் போக்குபவரே, எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்!

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே, நீர் எம்மீது இரங்குவீர்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் மாட்சியில் உள்ளவர் நீரே. 
ஆமென்.

வாசகங்கள்

முதல் வாசகம் 
(அனைவரும் அமர்ந்து முதல் வாசக இறைவார்த்தைகளுக்கு செவிமடுப்போம்)

வாசகம் வாசித்து முடித்தவுடன்,
வாசகர் : இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
எல் : இறைவா உமக்கு நன்றி

முதல் வாசகம் முடிந்தவுடன் பதிலுரைப் பாடல் அல்லது தியானப்பாடல் பாடப் படுகின்றது.

தியானப்பாடல்
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் - 2
உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!

பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் -2

வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை

 
இரண்டாம் வாசகம்

(அனைவரும் அமர்ந்து இரண்டாம் வாசக இறைவார்த்தைகளுக்கு செவிமடுப்போம்)
வாசகம் வாசித்து முடித்தவுடன்,
வாசகர் : இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
எல் : இறைவா உமக்கு நன்றி

அல்லேலூயா பாடல்

(அனைவரும் எழுந்து நின்று அல்லேலூயா பாடல் பாடவும்)

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 

நற்செய்தி வாசகம்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக..!
எல் : உம்மோடும் இருப்பாராக.
குரு : புனித ________ எழுதிய பரிசுத்த நற்செய்தியிலிருந்து வாசகம்.
எல் : ஆண்டவரே உமக்கு மகிமை

(அனைவரும் நற்செய்தி வாசகத்திற்கு செவிமடுப்போம்)
வாசகம் வாசித்து முடித்தவுடன்,
குரு : இது கிறிஸ்துவின் நற்செய்தி
எல் : கிறிஸ்துவே உமக்குப் புகழ்
 
மறையுரை 

(குருவானர் மறையுரை ஆற்றுவார். அனைவரும் அமர்ந்து மறையுரைக்கு செவிமடுப்போம்)

விசுவாச அறிக்கை

(ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் மட்டும்) 

  • பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.
  • அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
  • இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
  • போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
  • பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
  • பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
  • அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
  • பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
  • பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்; அர்ச்சிஷ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
  • பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
  • சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன்.
  • நித்திய ஜீவியத்தை விசுவசிக்கின்றேன்.
  • ஆமென். 
விசுவாசிகளின் மன்றாட்டு

விசுவாசிகள் மன்றாட்டில் மக்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் திருச்சபையின் தேவைகளுக்காகவும், குருக்களுக்காகவும் மற்றும் அனைத்துலக மக்கள் அனைவருக்காகவும் மன்றாடுவார்கள்.

நற்கருணை வழிபாடு

 

காணிக்கைப் பொருட்களைத் தயாரித்தல்

 

ப்பகுதியில் காணிக்கைப் பாடல் பாடப்படும். காணிக்கைப் பொருட்களா  அப்பமும் இரசமும் பலிபீடத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் திருஉடலாகவும் இரத்தமாகவும் மாறப்போகும் இந்த
அப்பத்தையும் இரசத்தையும் குருவானர் பலிபீடத்தில் தயார் செய்கின்றார்.

(அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
குரு: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா , உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட் பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக் கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

(இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
குரு: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா , உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட் பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக் கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைப்பும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.

காணிக்கை பாடல்

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - 2

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
நித்தம் வழிநடத்தும் - 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் - 2
வாருமய்யா வந்து என்னை - 2
வல்லமையால் நிரப்பும் - 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2
பரிசுத்தமாக்கி விடும் - 2

 
காணிக்கை மன்றாட்டு

குரு : சகோதர சகோதரிளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்.

எல் : ஆண்டவர் தமது திருச்சபையின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

குரு  : எங்கள் இரக்கம் நிறைந்த தந்தையே நீர் எங்களுக்குக் கொடுத்தவைகளையே நாங்கள் உமக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றோம். இக்காணிக்கைகளை ஏற்று எங்களுக்கு உமது மீட்பைத் தந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்  : ஆமென்.

நற்கருணை மன்றாட்டு

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக

குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்
எல் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்

குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்
எல் : அது தகுதியும் நீதியுமானதே

குரு : ஆண்டவரே தூயவரான தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும். எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும். கிறிஸ்து மாசற்றவராயினும் பாவிகளுக்காகப் பாடுபடவும், பொல்லாதவர்க்காக அநீத முறையில் தண்டனை பெறவும் திருவுளமானீர். அவரது சாவு எங்கள் பாவங்களைப் போக்கியது, அவரது உயிர்த்தெழுதலோ எங்களை உமக்கு உகந்தவராக்கியது. ஆகவே, நாங்கள் வானகத் தூதர் அனைவரோடும் சேர்ந்து உம்மைப் புகழ்ந்தேத்தி, அக்களிப்புடன் குரல் எழுப்பிச் சொல்வதாவது:

தூயவர் தூயவர் தூயவர்
மூவுலகிறைவனாம் ஆண்டவர்.
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா!
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா!

குரு : வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், புனிதத்திற்கெல்லாம் ஊற்று. ஆகவே, உம்முடைய தூய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் வணக்கத்துக்குரிய தம் திருக்கைகளில் அப்பத்தை எடுத்து, வான்நோக்கிக் கண்களை உயர்த்தி, எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையுமாகிய உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது: 
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள். ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.

அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள். ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.  இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
எல் : ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம்உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்.

ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.
இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், எங்கள் ஆயர்_______ ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இக்குடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய மக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

இவர் வழியாக, இவரோடு இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே...!
எல் : ஆமென்.

திருவிருந்து சடங்கு

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

இயேசு கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

குரு : ஆண்டவரே தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

எல் : ஏனெனில் அரசும் வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே..!

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவேஅமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே..!
எல் : ஆமென்

குரு : ஆண்டவருடைய சமாதானம் உங்களோடு என்றும் இருப்பதாக..!
எல் : உம்மோடும் இருப்பதாக.

குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.
 
உலகின் பாவம் போக்கம் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை தந்தருளும்.

குரு : இதோ இறைவனின் செம்மறி! இதோ உலகின் பாவங்களைப் போக்குகின்றவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றவர் பேறுபெற்றோர்.

எல் : ஆண்டவரே, தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்.

திருவிருந்து பாடல்

உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
என்னில் வா என் மன்னவா - 3


நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா - 2
எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
இணைகின்ற என் மன்னவா - 2

முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா - 2
இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண
எனைத் தேர்ந்த என் மன்னவா - 2


றுதி மன்றாட்டு

ஜெபிப்போமாக, அன்புத் தந்தையே இறைவா ! இத்திருவிருந்தில் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். நாங்கள் விசுவசிப்பதைப் பெற்றுக்கொள்வோம் என்னும் நம்பிக்கையை உம் திருமகனின் இறப்பினால் எங்களில் உறுதிப்படுத்தினீர். அவரது உயிர்த்தெழுதலால் எங்கள் வாழ்க்கைப் பயணத்தின் குறிக்கோளை நாங்கள் கண்டடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென் 

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக

குரு : எல்லாம் வல்ல இறைவன், தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக..!
எல் : ஆமென்

குரு : சென்று வாருங்கள். திருப்பலி நிறைவேறிற்று..!
எல் : இறைவா உமக்கு நன்றி.



2 comments:

  1. Good work for new Christians & people forgot the prayer like me.. thanks ... thanks the lot. God bless you. Continue the work like this.

    ReplyDelete
  2. Thanks for sharing. Excellent.

    ReplyDelete