Pages

Monday, 18 March 2013

புனித அல்போன்சா | Saint Alphonsa




புனித அல்போன்சாவின் வாழ்க்கை வரலாறு:

புனித அல்போன்சா 1910 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதி கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குடமாளூர் என்ற கிராமத்தில் ஜோசப் முட்டத்துபாடத்து  மற்றும் மேரி தம்பதியரின் நான்காவது குழந்தையாக பிறந்தார். 1910 ம் ஆண்டு ஆகஸ்ட் 27 ம் தேதி தூய மரியன்னை ஆலயத்தில் வைத்து அன்னா என்ற பெயருடன் திருமுழுக்கு பெற்றார். இவர் தனது ஊரில் அன்னக் குட்டி என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

1910ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி பிறந்த 3ம் மாதத்திலேயே அவரது தாயார் இறைவனடி சேர்ந்தார். அதன் பின்பு தம் அன்னையின் சகோதரியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். 1916ம் ஆண்டு மே 16ம் தேதி தொண்ணாம்குழி அரசு துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தார். 1917ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி புது நன்மை பெற்றார். 1923ம் ஆண்டு அவருக்குத் திருமணம் செய்து வைக்க வீட்டில் திட்டமிட்டதால் தீக்குழியில் குதித்து தன்னையே காயப்படுத்தி திருமணத்தை தடுத்துக் கொண்டார்.

1925ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி உறுதி பூசுதல் பெற்றார். 1927ம் ஆண்டு தனது 17-வது வயதில் பரணங்ஞானம் புனித கிளாரா கன்னியர் துறவற சேர்ந்தார். 1928ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி புனித அல்போன்ஸ் லிகோரியின் திருநாளன்று திருமுக்காடு பெற்று அல்போன்சா என்ற மறு பெயரைப் பெற்றுக் கொண்டார்.

1930ம் ஆண்டு மே 19ம் தேதி துறவியரின் திருவுடைகளைப் பெற்றுக் கொண்டார். 1932ம் ஆண்டு மே மாதம் முதல் 1933ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வாகைக்காடு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1936ம்  ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி நித்திய வார்த்தைப்பாடு எடுத்தார். 1936ம் ஆண்டு புனித குழந்தை தெரசா மற்றும் முக்திபேறு பெற்ற குரியாக்கோஸ் எலியாஸ் சவரா அடிகளாரின் பரிந்துரையால் உடல் நலம் பெற்றார். மீண்டும் 1939ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நுரையீரல் வீக்க நோயால் பாதிக்கப்பட்டார். 1940ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தன் அறையில் திடீரெனத் தோன்றிய திருடனைக் கண்டு அதிர்ச்சியுற்று நினைவாற்றலை இழந்தார். உடல் நலம் அதிகமாக பாதிக்கப் பட்டதால் 1941ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நோயில் பூசுதல் பெற்றார். 1941ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி புனித தெரசாவின் திருநாளன்று தனது நினைவாற்றலைத் திரும்பப் பெற்றார்.

1941 முதல் 1945 வரை உடல் நலம் சற்று முன்னேறியது. இருப்பினும் 1945ம் ஆண்டு ஜூலையில் வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமானது. 1946ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

1953ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இவரது முக்திப்பேறு பட்டத்திற்கான ஆய்வு பாலா மறைமாவட்டத்தால் துவக்கப்பட்டது. 1953ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இறையடியாளாக அறிவிக்கப்பட்டார். 1980ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இவரது முக்திப்பேறு பட்டத்திற்கான திருத்தூதரகச் செயல்பாடுகள் ஆரம்பமானது. 1981ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி திருத்தூதரகச் செயல்பாடுகளின் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.

1985ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அல்போன்சாவின் பரிந்துரையால் உடல் ஊனம் நலம் பெற்ற தாமஸ் அதியாலின் அறிக்கையை ஏற்றுக் கொண்டார். 1985ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி வணக்கத்திற்குரியவராக அறிவிக்கப்பட்டார்.  1986ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அல்போன்சாவுக்கு முக்திப்பேறு பட்டத்தை கோட்டயத்தில் வைத்து வழங்கினார். 2002ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இவரது புனிதர் பட்டத்திற்கான நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

குருப்பன் தாரா என்ற ஊரில் ஜினில் என்ற பத்து வயது சிறுவன் கால்கள் முறுக்கப்பட்ட நிலையில் பிறந்தான். மருத்துவர்கள் அவனுக்கு வாழ்நாள் முழுவதும் ஊனமாக இருக்க நேரிடும் என அத்தாட்சி கொடுத்தார்கள். ஆனால் 1999-ம் ஆண்டு அவனது பெற்றோர்கள் அருட் சகோதரி அல்போன்சாவின் கல்லறைக்கு எடுத்துச் சென்று திருத்தலத்தில் வேண்டுதல் செய்தார்கள். அதன் பின்னர் அவனது கால்கள் சரியான நிலைக்கு திரும்பி பூரண குணமடைந்து அவன் நடக்கத் தொடங்கினான்.

2007ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அல்போன்சாவின் பரிந்துரையால் உடல் ஊனம் நலம் பெற்ற ஜினில் அறிக்கையை திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் ஏற்றுக்கொண்டார். இறுதியாக 2008ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

புனித அல்போன்சாவின் திருத்தலங்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் வாழும் ஒரு லட்சம் சிரியன் மலபார் கிறிஸ்தவர்களில் இரண்டு பங்குகள் அருட் சகோதரி அல்போன்சா பெயர் தாங்கி செயல்படுகின்றன.

Photos:
. .
. .
. .
.
. . .

No comments:

Post a Comment