Pages

HISTORY


கடகுளம் வரலாறு (2014 வரை)

         தென்பாண்டிச் சீமையின் தென்கரையோரத்தில், முத்துக்குளி நகராம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் அரசூர் ஊராட்சியின் தென்பகுதியில் தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தின் ஓரத்தில், திசையன்விளை, இடையன்குடி, குட்டம், புத்தன் தருவை, தச்சன்விளை போன்ற ஊர்களுக்கு நடுவில் தென்றலும் கடற் காற்றும் இசைந்தாடும் பகுதியில், தேரியோரக் கரையில் கடகுளம் ஆதியில் ஓர் சிற்றூராக இருந்தது. இது தூத்துக்குடிக்கு மேற்கே 70 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலிக்கு தெற்கே 70 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரிக்கு கிழக்கே 59 கி.மீ தொலைவிலும் மேலும் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

         ஊரின் மேற்கு பகுதியில் புஞ்செய் நிலமும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் செம்மணல் தேரியும், வடக்குப் பகுதியில் குளமும் அதுசார்ந்த  புஞ்செய் நிலங்களும் நஞ்செய் நிலங்களும், திரும்பும் திசையெல்லாம் அடர்ந்த பனை மரக்காடுகளும் இருந்தன. மக்கள் அனைவரும் இயற்கை செல்வங்களின் செழிப்பில் வாழ்ந்து வந்தனர். குளத்திற்கு வட பகுதியில் நீர்ப் பாசன வயல்வெளி நிலங்கள் இருந்ததால் மக்களில் பலர் விவசாயம் செய்து வந்தனர்.

          குடகு மலைச்சரிவில் பெய்த மழை நீர் ஓடி வந்த ஓடை வந்தடையும் கடைசி குளமாக இந்த குளம் இருந்ததால் இந்த பகுதியை கடகுளம் என்று அழைத்து வந்தனர். நாளடைவில் இவ்வூரின் பெயர் கடகுளம் என்று விளங்கிற்று. இலைக்குளம் மற்றும் தருவைக் குளம் என்று பல குளங்கள் இப்பகுதியில் இருந்தாலும் கடகுளத்தில் மட்டும் தான் பாசன வயல்கள் இருந்தன என்பது மிகையாகது.

         குளத்துக்கு தென்பகுதியின் மேட்டில் சுமார் கி.பி 1650-ல் புனித இராஜகன்னி மாதா கோயிலைக் கட்டி மக்கள் அனைவரும் வழிபட்டு வந்தனர். ஊருக்கு மேற்குப் பகுதியில் சில பிரிவினை சபை கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்த 'ஆச்சரியபுரம்'  என்ற ஊரும், இந்துக்கள் வாழ்ந்த 'மறவன்விளை' என்ற ஊரும் இருந்துள்ளன. அவர்கள் வழிபட்ட கோவில்கள் இன்றும் உள்ளன.

        காலப்போக்கில் மறவன்விளையில் வாழ்ந்த இந்துக்கள் பலர் கிறிஸ்தவர்களாக மாறினர். இன்னும் சிலர் வேறு ஊர்களுக்கு சென்று குடியேறினர். இடம்பெயர்ந்தவர்களின் வாரிசுகள் இன்றும் அவர்களின் குலதெய்வக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர். இதேபோல ஆச்சரியபுரத்தில் வாழ்ந்த மக்களும் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று குடியேறினார்கள். இராஜகன்னி மாதா ஆலயத்தைச் சுற்றி வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் இங்கே நீடித்து நிலைத்து வாழ்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

        ஆண்டுதோறும் மும்மாரி மழை பொழிந்து வந்ததால் குளம் பெருகியும் நிலத்தடி நீர் மட்டம் மிக அருகில் இருந்ததால் இராஜகன்னி மாதா ஆலயத்தின் முன்பகுதியில் ஊற்று தோண்டி அதிலிருந்து மக்கள் குடிநீர் எடுத்துள்ளனர். காலப்போக்கில் ஆங்காங்கே விவசாயத்திற்கென கிணறுகள் தோண்டப்பட்டதால் ஆலயத்தின் முன்பு இருந்த ஊற்று கிணறாக தோண்டப்பட்டு 'கோயில் கிணறு' என்று அழைக்கப்பட்டது. அக்கால வழக்கப்படி பனை ஓலையால் செய்யப்பட்ட தோண்டியை பனை நாரால்கயிற்றில் கட்டி அதன் மூலம் மக்கள் கிணற்றில் தண்ணீர் இறைத்து குடிநீர் எடுத்தனர். குடிப்பதற்கு மட்டுமே இக்கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டது. ஊர் வழக்கப்படி திருமணமான மணப்பெண்கள் முதல் குடம் தண்ணீர் எடுக்க கோயில் கிணற்றிற்கு வந்து வெற்றிலை, பாக்கு போன்றவற்றை கிணற்றில் போட்டுவிட்டு தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கமாயிருந்தது. கிணற்றிற்கு அருகாமையில் யாரும் குளிக்கக் கூடாது என்ற ஒரு ஊர்க்கட்டுப்பாடு இருந்தது.

           ஊரைச் சுற்றிலும் விவசாயம் நடைபெற்றாலும் மக்களின் பிரதான தொழிலாக பனை மரம் சார்ந்த தொழிலே இருந்தது. பனை மரத்திலிருந்து பதநீர் சேகரித்தல், அதிலிருந்து பனை வெல்லம்(கருப்புக்கட்டி), பனங்கற்கண்டு தயாரித்தல் மேலும் பனை மர பத்தையிலிருந்து தும்பு(கயிறு தயாரிக்க உதவும் மூலப்பொருள்) எடுத்தல், பனைமர ஓலை மற்றும் மட்டையிலிருந்து பாய் முனைதல், பெட்டி செய்தல், பனைமரக் கொட்டைகளைப் பயன்படுத்தி பனங்கிழங்கு பயிரிடுதல் போன்ற தொழில்களைச் செய்து வந்தார்கள். அப்பொருட்களை வியாபாரம் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தனர். பனை மரத்திலிருந்து பதநீர் சேகரிக்கும் தொழில் குறிப்பிட்ட சில மாதங்களே நடக்கக்கூடியதாதலால் மற்ற காலங்களில் பனை சார்ந்த தொழில்களான பாய் முனைதல், பெட்டி செய்தல் போன்றவையும் ஒடை மரத்தை வெட்டி விறகு சேகரிக்கும் தொழிலும் செய்து வந்தனர்.

         நஞ்செய் நிலங்களில் கிணறு தோண்டி விவசாயம் செய்யப்பட்ட பகுதிகளில் நெல், வாழை, சோளம் மற்றும் உளுந்து போன்றவை பயிரிடப்பட்டன. புஞ்செய் நிலங்களில் மழைக்காலங்களில் கம்பு, காணம், பெரும்பயறு போன்றவை பயிரிடப்பட்டன.  


         இயற்கை நீர்ப்பாசன குளங்களை முறைப்படுத்தி வாய்க்கால், மறுகால் வசதிகள் அரசாங்கத்தால் செய்யப்பட்டன. குடகு மற்றும் கோதையாறு மலைபகுதியில் இரு மலைகளை இணைத்து மணிமுத்தாறு அணை கட்டப்பட்டபோது அதன் நீர்ப்பாசன வடிகால் குளங்களைப் பட்டியலிட்டு கல்வெட்டு அமைக்கப்பட்டதில் 'கடகுளம்' என்ற பெயர் கடை மடை பாசனப்பகுதி என்ற பட்டியலில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இன்றும் மணிமுத்தாறு அணையில் இந்த கல்வெட்டு உள்ளது.

மக்களின் உணவு வகைகள்:

        விவசாயத்தில் கிடைத்த அரிசி, கம்பு, சோளம், காணம், மற்ற பயிறு வகைகளும் பிரதான உணவாக இருந்தது. இதுதவிர பனங்கிழங்கு, நொங்கு, பதநீர், கருப்புக்கட்டி, குளத்தில் கிடைத்த மீன், நண்டு போன்றவையும் மக்களின் முக்கிய உணவாகும். சிலர் குளத்தையொட்டிய காடுகளில் முயல், அணில் போன்ற விலங்குகளை  வேட்டையாடி உண்பதை பொழுதுபோக்காகக்  கொண்டிருந்தனர். காடுகளில் ஆங்காங்கே விளைந்த புட்டு முருங்கை, சொடுக்கு தக்காளி போன்றவற்றையும் தெரிப்பகுதியில் விளைந்த நாவல் பழம், கொல்லா(முந்திரி) மர பழங்களும், காரைப்பழம் மற்றும் இலந்தைப்பழம் போன்றவற்றையும் உண்டு மகிழ்ந்தனர்.
 
13 ஆண்டு வறட்சி காலம்:
 
           இவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மக்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தொடர்ந்து 13 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாத காரணத்தினால் குளம் வற்றிப் போனது. கிணறுகள் பல வறண்டு போயின. மலைப்பகுதியிலிருந்து வந்த ஓடை நீரும் வரவில்லை. ஊரெங்கும் கடும் வறட்சி நிலவியது. மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். கடைகளில் கூட உணவுப்பொருட்கள் கிடைக்காத அளவுக்கு தட்டுப்பாடு இருந்தது. வாழை மரத்தின் அடிப்பகுதியிலுள்ள வாழைக்குத்தியைக் கூட மக்கள் உணவாகக் கொண்டிருக்கின்றனர். கூடுதாழை, கூட்டப்பனை மற்றும் உவரி போன்ற ஊர்களிலிருந்து மக்கள் இங்கு வந்து வாழைக்குத்தி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

           இந்த வறட்சிக் காலத்தை கடகுளத்தின் இருண்ட காலம் என்று கூட கூறலாம். இக்காலத்தில் குளத்தைச் சுற்றி அடர்ந்து காணப்பட்ட பனை மரங்கள் பல பட்டுப் போயின. இன்னும் சில பனை மரங்கள் சூம்பிப் போயின. நீண்ட ஆயுளுடன் வாழும் பல பனைமரங்களில் ஒரு இடம் மட்டும் சூம்பிப் போய் இருப்பதையும் அதன்பின்பு மழை வந்த காலத்தில் மரம் சாதாரண தடிமனுக்கு வந்திருப்பதையும் இன்று கூட நாம் காணலாம்.

         நஞ்செய் நிலங்களில் மக்கள் கிணறு தோண்டி கமலை, துலாஏற்றம் தோண்டி போன்றவற்றால் நீர் பாய்ச்சி விவசாயம் செய்துவந்தனர்.ஊரைச்சுற்றிலுமுள்ள நிலங்கள் பெரும்பாலும் வைரவம் ஊரைச் சார்ந்த சைவப் பிள்ளைமார்களுக்கும், புத்தன்தருவை ஊரைச் சார்ந்த இஸ்லாமியர்களுக்குமே உரிமையாக இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் வந்து நில குத்தகைப் பணம்(நிலவாரத் தொகை) வாங்கிச் சென்றுள்ளனர். சிலர் விளைச்சலின் ஒருபகுதியை வாங்கிச் சென்றுள்ளனர்.

          பனை மரமே மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது. அதிலிருந்து கிடைத்த ஓலை, மரம் மற்றும் தென்னை மர ஓலையிலிருந்து செய்த தட்டி போன்றவற்றால் வீடு கட்டி அதில் வசித்து வந்தனர். புனித இராஜகன்னி மாதா ஆலயம் மட்டுமே கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டிருந்தது. மக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த வியாபாரிகள் மட்டுமே சற்று வசதியுடன் காணப்பட்டனர். அவர்களிடம் பணவசதி இருந்த காரணத்தினால் அவர்களில் சிலரும் கல் வீடு கட்டத் தொடங்கினர். கோயில் மிகவும் பழையதாகிப் போன காரணத்தாலும், ஊரின் மக்கள் தொகை பெருகி கோயில் சிறியதாக இருந்த காரணத்தாலும் பழைய கோயிலுக்கு முன்பாக புதிதாக பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கினர். சில காரணங்களால் புதிய கோயில் அஸ்திவாரம் போட்டபின் 40 வருடங்கள் வேலை நடக்காமல் அப்படியே கிடந்தது. பின்னர் வேலை தொடங்கி அழகிய இராஜகன்னி மாதா ஆலயம் உருவானது. 1926-லிருந்து புதிய கோயிலில் வழிபாடுகள் நடக்கத் தொடங்கின. பழைய கோயில் இருந்த இடத்தில் தற்போது புதிய சிற்றாலயம் கட்டப் பட்டுள்ளது.

           அக்காலத்தில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தீவெட்டித் திருடர்கள் பலர் ஊருக்குள் புகுந்து மக்களின் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். திருடர்கள் மீது இருந்த பயத்தால் மக்களில் பலர் தங்கள் பணம் மற்றும் உற்பத்திப் பொருட்களை கல் வீடு வைத்திருந்த வியாபாரிகளிடம் கொடுத்து வைத்திருந்தார்கள். தங்களுக்கு தேவைப்படும்போது அவர்களிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு மீதியை அவர்களிடமே விட்டு வைத்திருந்தனர். இவ்வாறு பல மக்களின் பணங்களும் தங்களிடம் இருந்ததால் அந்த வியாபாரிகள் அந்த பணத்தை வைத்து நிலங்கள் வாங்கினார்கள். அந்த நிலத்தில் சொந்தமாக விவசாயம் செய்து அதன் மூலமும் வருவாய் ஈட்டி வந்தார்கள். இதனால் அவர்கள் மென்மேலும் செல்வந்தர்களாக மாறினார்கள். கோயில் மற்றும் ஊர் நிர்வாகம் அவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. ஊர் மக்களுக்கு நீதி சொல்லும் நாட்டமை அந்தஸ்தும் தோன்றலாயிற்று. எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் ஊர்மக்களைக் கூட்டி பஞ்சாயத்து பேசி தீர்ப்பு சொல்லும் அதிகாரம் அவர்களிடமே இருந்தது. இந்திய அரசு ஏற்படுத்திய பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவியும் அவர்களிடமே இருந்தது.

மக்களின் கலை ஆர்வம்:
            கடகுளம் மக்கள் கலையை வளர்த்து வந்துள்ளனர். மக்கள் கலை மற்றும் பண்பாடுகளில் சிறந்து விளங்கினர். இயல், இசை மற்றும் நாடகம் போன்ற மூன்று கலைகளிலும் மேன்மை பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். இவ்வூர் கவியரசர்கள் சிலர் எழுதிய பாடல்கள் இவ்வ்வட்டரமெங்கும் பிரபலமாயின. பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் விருதுநகர், திருவில்லிபுத்தூர் மற்றும் கேரளா போன்ற பகுதிகளிலிருந்து பிரபல சங்கீத வித்வான்களை இங்கு அழைத்து வந்து ஊரில் தங்க வைத்து அவர்களிடம் இசை பயின்றனர். வாய்ப் பாட்டு முக்கியத்துவம் பெற்றது. அக்காலத்தில் புகழ்வாய்ந்த கர்நாடகக் கலை(இசை நாடகம்) இவ்வூரில் சிறந்தோங்கியது.

           வருடந்தோறும் இவ்வூரில் புனித இராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 நாட்கள் வெகு விமரிடையுடன் நடைபெறும். 7-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தினமும் சப்பர பவனி நடைபெறும். 7 சப்பரங்கள் ஊரைச் சுற்றிலும் பவனி வரும். சப்பரப் பவனியின்போது பாடப்படும் பாடல்களைக் கேட்டு ரசிக்கவும், 10-ம் திருவிழாவன்று சப்பரப் பவனி முடிந்ததும் நடைபெறும் கர்நாடகக் கலையைக் கண்டு மகிழவும் இவ்வட்டாரத்திலுள்ள பல ஊர் மக்கள் இங்கு வருவதுண்டு. அக்காலத்தில் மின்சார வசதி இல்லாத காரணத்தினால் தீவெட்டி வெளிச்சத்தில் நாடகம் நடைபெறும். மக்கள் இங்கு பாடப்பெற்ற பாடல் சுவடிகளை வாங்கிச் சென்று தங்கள் ஊர்களில் பாடி மகிழ்வர். எனவே கடகுளத்துக்கு கலைக்குளம் என்றும் இசைக்குளம் என்றும் சிறப்புப் பெயர்கள் வழங்கலாயிற்று. இங்குள்ள கவியரசர்களின் பேராற்றலால் எழுதப்பட்ட கிறிஸ்தவ வரலாற்று ஒயிலாட்டப் பாடல்கள் இவ்வட்டாரமெங்கும் புகழ் பெற்றன. இங்குள்ள ஒயிலாட்டக் குழுவினர் பல ஊர்களுக்குச் சென்று திருவிழா மற்றும் திருமண காலங்களில் ஒயிலாட்டம் நடத்தி மக்களை மகிழ்வித்தனர்.

           நாடகக் கலை பிரசித்தி பெற்றிருந்த அக்காலத்தில் இவ்வூரில் நடைபெற்ற நாடகங்களில் முக்கிய வேடங்களில் (ராஜா, மந்திரி) நடித்தவர்களுக்கு ஊரில் தனி மதிப்பு இருந்தது. அவர்கள் பெயருடன் ராஜா என்ற அடைமொழி சேர்க்கபட்டது. அவ்வகையில் நாடகக் கலை மக்களை ஆட்கொண்டிருந்தது. ஆண்கள் பெரும்பாலும் நீண்ட முடி அதாவது கொண்டை முடி வைத்திருந்தனர். மக்களில் சிலர் திரைகடலோடி திரவியம் தேடுதற் பொருட்டு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று வருமானம் ஈட்டியுள்ளனர். அவர்கள் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையோ ஊருக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். வெளிநாடுகளுக்கு சென்று வந்ததால் அவர்களின் வாழ்க்கைமுறை மாறியது. அவர்கள் தலை முடியை குட்டையாக வெட்டியும், பேண்ட் மற்றும் சட்டை அணிந்தும் நவநாகரீகத்திற்கு ஏற்றார்போல் மாறினார்கள். அவர்களைப் பார்த்து ஊர் மக்களில் சிலரும் புதிய கலாச்சாரத்துக்கு மாறினார்கள்.

உபதேசியாரை உபசரிக்கும் விதம்:

          கடகுளம் ஊர் மக்கள் பனைத்தொழில் செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் ஏறக்குறைய தை மாதம் முதல் தேதியில் மக்கள் அனைவரும் கோயில் உபதேசியாரிடம் சென்று நெற்றியில் சிலுவை அடையாளம் வாங்குவதும், மார்பில் சந்தனக் கலவை பூசச் செய்வதும், உபதேசியார் கையாலே தங்கள் பனைத் தொழில் சாதனங்களை ஆசீர்வதித்து வாங்குவதும் வழக்கமாய் கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் ஊரில் சிலர் காய்ச்சவரி என்ற பெயரில் மக்களிடம் வரி வசூலித்து உபதேசியார் குடும்பத்துக்கு மீன்கள் வாங்கிக் கொடுத்தனர். காலப்போக்கில் இவ்வழக்கம் மறைந்து போனது.

            வருடந்தோறும் புனித இராஜகன்னி மாதா ஆலய கொடியேற்றத்தின் போது கோவில் நிர்வாக செலவு கணக்கிலிருந்து வெற்றிலை, பாக்கு வாங்கி வைத்துக் கொள்வார்கள். உபதேசியாரின் குடும்பத்தினர் அனைவரும் முதலில் வெற்றிலை போடுவார்கள். அதன்பிறகு ஊர் மக்கள் வெற்றிலை போடுவார்கள். ஊரில் பலர் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த வழக்கமும் நாளடைவில் மறைந்து போனது.

           ஊரின் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் உபதேசியார் குடும்பத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
 

தனிப் பங்கு அமைந்த விதம்:


         கத்தோலிக்க கிறிஸ்தவ குருக்கள் சொக்கன் குடியிருப்பு ஊரிலிருந்து இங்கு வந்து மக்களை ஆன்மீக வழியில் நடத்தினர். சொக்கன் குடியிருப்பிலிருந்து மணல் மாதா கோவில், தருவைகுளம் வழியாக வில்வண்டியில் குருக்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை திருவிழாக் காலங்களில் மட்டும் குருக்கள் இங்கு வந்து தங்கி வழிபாடு நடத்தி சென்றுள்ளனர். திருமண காரியங்களுக்கு மணமக்கள் பங்குத் தலைமையிடமான சொக்கன் குடியிருப்புக்குச் சென்று திருமணம் செய்து வந்துள்ளனர். மணல் மாதா கோவில் புதையலிலிருந்து துவங்கி பிரபலமானதும் இந்த காலக்கட்டத்தில் தான். எனவே கடகுளம் மக்கள் மணல் மாதா கோயிலுக்கு அடிக்கடி பாத யாத்திரையாகச் சென்று மணல் மாதாவை வழிபட்டு வந்துள்ளனர்.

          சொக்கன் குடியிருப்பு மிக தொலைவில் இருந்ததாலும் கூடுதாழை மக்கள் அடிக்கடி புனித இராஜகன்னி மாதா கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்று மக்களுடன் நல்ல உறவு கொண்டாடி நல்ல உறவுடன் வாழ்ந்ததாலும் கூடுதாழையிலிருந்து குருக்கள் கடகுளத்துக்கு வந்து மக்களை ஆன்மீக வழியில் நடத்திச் சென்றனர். ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் வழிபாடுகளில் பங்கேற்கும் வண்ணம் அவர்களை தயார் செய்தார்கள். திருவிழாக் காலங்களில் 10 நாட்களும் குருக்கள் இங்கு வந்து தங்கி வழிபாடு நடத்தி சென்றுள்ளனர்.

         ஆலய வழிபாடுகளில் கடகுளம் மக்களிடையே ஆர்வத்தைக் கண்டு குருக்கள் வியப்படைந்தனர். திருவிழாவைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தவக்காலம் போன்ற முக்கிய நாட்களிலும் குருக்கள் இங்கு வந்து வழிபாடு நடத்தத் தொடங்கினர். அக்காலத்தில் கூடுதாழையை விட கடகுளம் தான் பெரிய ஊர். எனினும் கூடுதாழை மக்கள் போர்ச்சுக்கீசியர் காலத்து கிறிஸ்தவர்கள் என்பதால் பாரம்பரிய பங்குத் தளமாக இருந்தது. திசையன்விளை கூட கூடுதாழை பங்குடன் இணைந்திருந்தது. கூடுதாழையிலிருந்த பங்குத்தந்தையர்கள் அர்பணிப்பு உள்ளத்துடன் பணியாற்றினர். வெம்மணங்குடி வழியாக கடகுளத்திற்கு சாலை அமைக்க ஏற்பட்ட பல்வேறு எதிர்ப்புகளை சாதூரியமாகக் கையாண்டு போக்குவரத்து வசதிகளை அமைத்துக் கொடுத்தனர்.

           தவக்கால இறுதி வழிபாடுகளில் சிலுவைப் பாதை தியானம் என்பது முக்கியமான ஒன்றாகும். அதற்க்கான 14 சம்பவங்களை நினைவூட்டக் கூடிய புகைப் படங்கள் கோயிலினுள் அமைக்கப்பட்டிருக்கும். தவக்கால சிலுவைப் பாதை வழிபாடுகளில் அதிக மக்கள் பங்கேற்பதால் கோவிலினுள் போதிய இடம் இல்லாமல் போனது. எனவே கோயில் முன்னால் மக்கள் நடந்து சென்று இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கும் நோக்குடன் 14 சிலுவைகளை நாட்டி சிலுவைப் பாதை வழிபாட்டில் பங்கேற்றனர். குருக்கள் முன்னின்று அந்த வழிபாடுகளை நடத்துவர். தவக்காலத்தின் 40 நாட்கள் மட்டுமே அந்த சிலுவைகள் நாட்டப்படும், அதன் பிறகு இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா முடிந்ததும் அந்த சிலுவைகள் அகற்றப்படும்.

           ஆலய வழிபாடுகளில் கடகுளம் மக்கள் அதிக அக்கறையுடன் செயல்படுவதைக் கண்ட குருக்கள் கடகுளம் ஊரை தனிப்பங்காக உயர்த்துவதற்கு மக்கள் முயற்சியெடுக்கலாமென்று ஆலோசனை கூறினார்கள். ஊர் மக்களும் இதனை நிறைவேற்றத் துடித்தார்கள். பல குருக்களை சந்தித்து பேசி, தனிப் பங்கு அமைய என்ன செய்ய வேண்டுமென்று தெளிவாக கேட்டு அறிந்து கொண்டு அதற்கான பணிகளைத் தீவிரப் படுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்ட ஆயருக்கு 'கடகுளம் தனிப்பங்காக அமைய வேண்டும்' என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதன்படி 13.06.1984-ல் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால் கடகுளம் தனிப் பங்குத்தளமாக அறிவிக்கப்பட்டது. அருட்தந்தை. பர்னபாஸ் அவர்கள் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றினார்.


புனித ராஜகன்னி மாதா ஆலயம்:

புனித ராஜகன்னி மாதா ஆலயம்

புனித ராஜகன்னி மாதா
  • கடகுளம்,  புனித ராஜகன்னி மாதா ஆலயமானது 1880-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1927-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட்டது.
  • 1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. ரோச் அவர்கள் ஆலயத்தை அர்ச்சித்து  திறந்துவைத்தார். 
  • ஆரம்ப காலங்களில் இவ்வாலயமானது அருகிலுள்ள பங்குகளான கூடுதாழை, கூட்டப்பனை, சொக்கன்குடியிருப்பு மற்றும் திசையன்விளை ஆகிய பங்குகளில் கிளைப் பங்காக இணைந்திருந்தது. 
  • 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டது.

பங்குத்தந்தை: அருட்தந்தை. அன்புச் செல்வன் அவர்கள்
மறை மாவட்ட ஆயர் : மேதகு ஆயர். Dr. A. ஸ்டீபன் அவர்கள்

சிற்றாலயங்கள்:
  1. புனித அந்தோணியார் சிற்றாலயம்
  2. புனித சவேரியார் சிற்றாலயம்
  3. புனித ராஜகன்னி மாதா சிற்றாலயம்
  
மண்ணின் மைந்தர் குருக்கள்: 
  1. அருட்தந்தை J. எட்வர்ட் .
  2. அருட்தந்தை R. அமல்ராஜ் .
  3. அருட்தந்தை A. நெல்சன்ராஜ் .
  4. அருட்தந்தை ஞான பெப்பின் .
  5. அருட்தந்தை G. செல்வராயர் .
  6. அருட்தந்தை R. இருதயராஜ் .
  7. அருட்தந்தை ஸ்டீபன் ஜாண்சன் .

மண்ணின் அருட்சகோதரிகள்:
  1. அருட்சகோதரி ஹெலன்
  2. அருட்சகோதரி ஜெயராணி
  3. அருட்சகோதரி ஞான்சி

திருப்பலி நேரங்கள்:
 

வார வழிபாட்டு நிகழ்வுகள்:

  • தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
  • மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
  • மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை புனித சவேரியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
  • மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை புனித ராஜகன்னி மாதா சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள்:


  • வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6.45 மணி முதல் 8.30 மணி வரை திருப்பலி நடைபெறும்.

கிளைப் பங்கு:



புனித ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா:

  • ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
  • ஒவ்வொரு நாளும் காலை திருப்பலியும், மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும்  நடைபெறுகிறது.
  • நவ நாட்களில் ஒவ்வொரு நாளையும் ஊரின் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், திரு இருதய சபையினர், மரியாயின் சேனை சபையினர், திருக்குடும்பச் சபையினர்,  புனித அந்தோணியார் இளைஞர் சபையினர், புனித அமலோற்பவ அன்னை சபையினர், பாலர் சபையினர் மற்றும் வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் ஆகியோர் சிறப்பிக்கின்றனர்
  • ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழா நாட்களில் புனித ராஜகன்னி அன்னையின் திருத்தேர் ஊரைச் சுற்றிலும் பவனி வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
  • திருவிழா நிறைவுற்ற மறுநாள் மதியம் ஊர் பொது அசனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பாக ஊர் பொது அசனம் நடைபெறும்.


திருவிழா நிகழ்வுகள்:

1-ம் திருவிழா :
            காலை கொடியேற்றத்துடன் தொடங்கி திருப்பலி மற்றும் மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.

2-ம் திருவிழா முதல் 7-ம் திருவிழா வரை தினமும் காலையில் திருப்பலியும் மாலையில் மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளையும் ஊரின் ஒவ்வொரு சபையினர் சிறப்பிக்கின்றனர்.


8-ம் திருவிழா:

         காலை திருப்பலி மற்றும் மாலை நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.


9-ம்திருவிழா:

         காலை திருப்பலி மற்றும் மாலை அன்னையின் திருத்தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.


10-ம் திருவிழா:

         காலை திருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெறும். திருப்பலியில் ஊர் சிறுவர்களுக்கு புது நன்மை கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுத்தல் நடைபெறும். மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாலையில் அன்னையின் திருத்தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.

11-ம் நாள்:

        ஊர் நிர்வாகிகள் சார்பில் மதியம் ஊர் பொது அசனம் நடைபெறுகின்றது.

12-ம் நாள்:

        புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பாக ஊர் பொது அசனம் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு:

அருட்தந்தை. அன்புச் செல்வன் அவர்கள்,
பங்குத் தந்தை,
புனித ராஜகன்னி மாதா ஆலயம்,
கடகுளம் -628656,
தூத்துக்குடி மாவட்டம்.

தொலை பேசி எண்:  04639 255335

நன்றி:
                இந்த தகவல்களை சேகரித்துக் கொடுத்த கடகுளத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. S. கார்லஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் :

. . .
. .

8 comments:

  1. எல்லாம் நல்லா இருக்கு
    கடகுளம் ஊரிலிருந்து பல குருக்களும் கன்னியர்களும் இறைபணி போதிப்பத்தர்க்கு சென்றுள்ளனர்

    ReplyDelete
  2. the statue of our lady of Rajakannimatha face is so grace, daily i pray towards our lady. thank u so much for publishing.

    ReplyDelete
  3. please change the songs. and profile

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. DEAR SIR...ENAKU SILUVAI PATHAI PADAL "ARUKINRAR THALLADI THAVAZTHU KALAIPODU" ENRA PALALIN MP3 OR LYRIC VENDUM SIR

      MAIL ID:prasathc13@gmail.com

      Delete
    2. DEAR SIR...ENAKU SILUVAI PATHAI PADAL "ARUKINRAR THALLADI THAVAZTHU KALAIPODU" ENRA PALALIN MP3 OR LYRIC VENDUM SIR

      MAIL ID:prasathc13@gmail.com

      Delete
  5. DEAR SIR...ENAKU SILUVAI PATHAI PADAL "ARUKINRAR THALLADI THAVAZTHU KALAIPODU" ENRA PALALIN MP3 OR LYRIC VENDUM SIR

    ReplyDelete