Pages

Sunday, 25 May 2014

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி | Thayapara Rani Thatchanam AllRani

Click here to download Thayapara Rani Thatchanam AllRani mp3 song

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்
தலைபணி ஜெயராணி  --2

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை
விமரிசை புரிராணி  --2

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வங்கமார் கலிங்கம் கொங்கனம் மலையாளம்
குதுகலி மகாராணி  --2

தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
ஆந்திரம் குடகம் அகில மராட்டம்
ஆண்டிடும் மகாராணி  -- 2

நாளாம் நாளாம் புனித நாளாம் | Naalam Naalam Punitha Naalam

Click here to download Naalam Naalam Punitha Naalam mp3 song

நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம்  (2)

அன்பான தெய்வத் தாயாரின் நாளாம்  (2)
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம்

தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம்  (2)
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம்

தெய்வீக அன்போ கன்னியின் வழியாய்  (2)
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம்  (2) -நாளாம் நாளாம்

ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே | Arokiya Thaaye Aadharam Neeye

Click here to download Arokiya Thaaye Aadharam Neeye mp3 song

ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே  --2
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே..!
கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
சிறை மீட்க வர வேண்டுமே..!  -- 2
வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி
நீர் எங்கள் நிறைவான தயவானதாலே  --ஆரோக்கியத் தாயே

உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
ஏமாந்த கதை இல்லையே
எங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே..!   --2
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம்  --ஆரோக்கியத் தாயே

Friday, 18 April 2014

Engu Pogireer Yesu Thaivame | எங்குபோகிறீர் இயேசு தெய்வமே

எங்குபோகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் --எங்கு போகிறீர்

தீய சிந்தனை நான் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி நான் சுமத்தினேன்
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உன் விலாவில் குத்தினேனே
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரி துப்பியது என் பகைமை உணர்ச்சியால்
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

Monday, 31 March 2014

Yesuvin Anbai Maranthiduvayo | இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2
மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ -இயேசுவின்

அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2
கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு -இயேசுவின்

அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2
சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு -இயேசுவின்

எனக்காக மனுவுரு தரித்த நல் அன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு -2
எனக்காக உயிரையே தந்த தேவ அன்பு - இயேசுவின்

கரைக்கடங்கா அன்பு கசிதரும் அன்பு
கைதி போல் இயேசுவே சிறையிடும் அன்பு
விலையில்லாப் பலியாக விளங்கிடும் அன்பு -2
விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு  -இயேசுவின்

Nan Paavi Yesuve | நான் பாவி இயேசுவே

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே- விழுந்துவிட்டேன் மனம்
உடைத்துவிட்டேன் என்னைத்
தேற்றும் இயேசுவே -2

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே -2

புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை கட்டும் இயேசுவே -2

சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே -2

நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே -2

Kettup Ponom Paviyanom | கெட்டுப் போனோம் பாவியானோம்

கெட்டுப் போனோம் பாவியானோம்
கிருபை செய் நாதனே
மட்டில்லாக்  கருணை என்மேல்
வைத்திரங்கும் இயேசுவே

பாடுகள் நீர் பட்ட போது
பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடி பாவம் தீர்த்து மோட்சம்
கொள்ளுவிக்க வல்லதே   -கெட்டுப் போனோம்

துஷ்ட யூதர் தூணினோடு
தூய கைகள் கட்டியே
கஷ்டமாய் அடித்தபோது
காய்ந்த செந்நீர் எந்துணை    -கெட்டுப் போனோம்

சென்னிமேல் கொடிய யூதர்
சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத்தால்
சர்வ பாவம் நீங்குமே   -கெட்டுப் போனோம்

Manithaa O Manithaa | மனிதா ஓ மனிதா

மனிதா ஓ மனிதா நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே  திரும்புவாய் -2
நினைவில் வை நினைவில் வை
நினைவில் வை  ஓ மனிதா

இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்
இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம்
இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம்
இருள்தனைக் களைவோம்  அருள்தனை அணிவோம்

கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்
கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும்
சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும்
சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும்

Thayai Seivai Nathaa | தயை செய்வாய் நாதா

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா
பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் -தயை செய்வாய்

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் -தயை செய்வாய்

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன் -தயை செய்வாய்

Sunday, 23 February 2014

Siluvai Pathai in Tamil | சிலுவைப்பாதை -14 நிலைகள்

Click here to view Tamil Siluvai Paathai padalgal| சிலுவைப் பாதை பாடல்கள்

நிலை- 1 நிலை- 2 நிலை- 3 நிலை- 4 நிலை- 5 நிலை- 6 நிலை- 7
நிலை- 8 நிலை- 9 நிலை- 10 நிலை- 11 நிலை- 12 நிலை- 13 நிலை- 14

நிலை 1: இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்.

பாடல்:
பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்.
செபம்:
எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோ அறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும், வழியும், உண்மையுமான உம்மையே நாங்கள் பின்பற்றவும், தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 2: இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

பாடல்:
தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
செபம்:
அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவை எங்கள் பாவங்களின் விளைவு என்பதை உணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப் பழி சுமத்தாமல் இருக்கவும், எங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.
நிலை 3: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் விழுகிறார்.

பாடல்:
விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் விழுகிறார்
செபம்:
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம் குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால் வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 4: இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.

பாடல்:
தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள் 

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.
செபம்:
அன்பு இயேசுவே! உம்மை ஈன்றெடுத்த அன்னை மரியா உம் துன்பங்களைக் கண்டு மனமுடைந்தார். அந்த அன்னையின் அரவணைப்பில் நாங்கள் என்றும் மகிழ்வுகொள்ள அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 5: இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

பாடல்:
மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்
செபம்:
அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்துசெல்ல சீமோன் என்பவர் துணைசெய்தார். எங்கள் சகோதரர் சகோதரிகளின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திட எங்களுக்குத் துணைசெய்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 6: இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.

பாடல்:
நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.
செபம்:
அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும் கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணி அன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார். எங்கள் வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் கவலையால் வாடும் அனைவரின் துன்பங்களையும் துடைத்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 7: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.

பாடல்:
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.
செபம்:
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களை அழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர். ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும் கண்டு துவழ்ந்துவிடாமல் துணிந்து எழுந்து, உம்மேல் நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 8: இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

பாடல்:
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் 

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
செபம்:
அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கரிய துன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர். தன்னலம் பாராது பிறர் நலம் நோக்கவும், துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்கு நல்மனத்தைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திட அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 9: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார்.

பாடல்:
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார்.
செபம்:
அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால் உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள் பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நாங்கள் தூய்மையோடு வாழவும், பாவத்தை வெறுத்து, உம் அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 10: இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

பாடல்:
உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.
செபம்:
அன்பு இயேசுவே! உம் உடைகளைக் களைந்தவர்கள் உம்மை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமை, அரசியல் அடக்குமுறை, அதிகாரப்பாணி போன்ற அவலங்களால் மனித உரிமையும் மாண்பும் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்படுகின்ற எம் சகோதரர் சகோதரியரை நினைத்துப் பார்க்கின்றோம். உம் உடன்பிறப்புகளாகிய அவர்களது மாண்பினைக் காத்துப் போற்றிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 11: இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

பாடல்:
பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.
செபம்:
அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்டபோது உம் கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்கள் காயங்களைக் குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால் நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகிய சிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியது போல நாங்களும் எங்கள் துன்ப துயரங்களை உம் சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களை இடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 12: இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.

பாடல்:
இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.
செபம்:
அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர் சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின் பிள்ளைகளாக்கிட நீர் எம்மில் ஒருவராக மாறினீர். சிலுவையில் தொங்கியபோது நீர் உரைத்த சொற்களை நினைத்துப் பார்க்கிறோம். “தாகமாயிருக்கிறது” என்று கூறிய இயேசுவே, எங்கள் ஆன்ம தாகத்தை வளர்த்தருளும். “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி உயிர்நீத்த இயேசுவே, நாங்கள் கடவுளின் திருவுளத்தை இறுதிவரை நிலைத்து நின்று நிறைவேற்றிட அருள்தாரும். ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 13: இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள்.

பாடல்:
துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள்.
செபம்:
அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார். அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காக உயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வு வழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும் பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திட அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

நிலை 14: இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.

பாடல்:
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.
செபம்:
அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில் வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகி அழிந்து போகவில்லை. நாங்களும் திருமுழுக்கின் வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம். பாவத்திற்கு இறந்தோம். ஆனால், நீர் புத்துயிர் பெற்று எழுந்தது போல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு அளித்து, புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்ற வாழ்வு இவ்வையகம் பெற்று மகிழ்ந்திட அருள்வீராக. ஆமென்!
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.
பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும்.
என்றென்றும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. (மூன்று முறை)
பரிசுத்த பாப்பானவரின் கருத்துக்களுக்காக செபிப்போமாக.
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம்.

Saturday, 4 January 2014

Infant Jesus Church Bangalore Annual Feast 2014 | குழந்தை இயேசு திருத்தல ஆண்டு விழா 2014

                               பெங்களூரு, அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் 43-வது  ஆண்டு விழா 04/01/2014 சனிக் கிழமையன்று மாலை 5.45 மணிக்கு  கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெங்களுரு உயர் மறை மாவட்ட பேராயர் பேரருட்திரு. டாக்டர் பெர்னார்ட் மோரஸ் அவர்கள் தலைமையேற்று கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் திரு K.J. ஜார்ஜ் அவர்கள் மற்றும் சாந்திநகர் சட்ட மன்றத் தொகுதி M.L.A திரு N.A. ஹாரிஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

                         திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்தந்தை . P. மைக்கேல் அந்தோணி , திருத்தல நிர்வாகி, அருட்தந்தை ஆரோக்கிய தாஸ், உதவி பங்குக் குருக்கள் அருட்தந்தை ஜஸ்டின் துரை ராஜ் மற்றும் அருட்தந்தை மாக் டொனல்ட் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் நன்றியுரை வழங்கினார்கள்.

நவநாள் திருப்பலி நேரங்கள்:

        காலை                                                    மாலை  

நேரம்      மொழி                                        நேரம்      மொழி  
05.45         தமிழ் & ஆங்கிலம்                   03.00          மலையாளம்
06.30         ஆங்கிலம்                                    04.00          கொங்கனி
08.00         கன்னடம்                                     05.00          ஆங்கிலம்
09.00         தெலுங்கு                                     06.00          தமிழ்
10.00         கன்னடம்
11.15         தமிழ்

ஞாயிறு திருப்பலிகள்:

(05/01/2014
மற்றும் 12/01/2014)
   
     காலை                                                    மாலை

நேரம்      மொழி                                      நேரம்      மொழி  
05.45         தமிழ்                                           03.00          மலையாளம்
07.00         ஆங்கிலம்                                  04.00          கொங்கனி
08.30         தமிழ்                                           05.00          ஆங்கிலம்
10.00         கன்னடம்                                   06.00          தமிழ்
11.30         தமிழ்

* நவநாட்களின் ஒவ்வொரு நாளும் மாலை 06.00 மணி திருப்பலி முடிந்ததும் ஆராதனை மற்றும் நோயாளிகளை குணப்படுத்தும் நற்கருணை ஆசீர் நடைபெறும்.

திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்:

கூட்டுத் திருமணம்:

             05/01/2014 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10.00 மணி கன்னடம்  மற்றும் 11.30 மணி தமிழ் திருப்பலியில் கூட்டுத் திருமணங்கள் நடைபெறும்.

நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி:

           11/01/2014 சனிக்கிழமையன்று, காலை 10.00 மணி கன்னடம் மற்றும் 11.30 மணி தமிழ் திருப்பலியில் நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி நடைபெறும்.

பொன்விழா கொண்டாடும் தம்பதியர்களுக்கான சிறப்புத் திருப்பலி:

             12/01/2014  ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10.00 மணி கன்னடம் மற்றும் 11.30 மணி தமிழ் திருப்பலியில் பொன்விழா கொண்டாடும் தம்பதியர்களுக்கான சிறப்பு திருப்பலி சிறப்புத் திருப்பலி நடைபெறும்.

திவ்விய நற்கருணை ஆராதனை:

            ஒவ்வொரு நாளும் காலை 06.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை திவ்விய நற்கருணை ஆராதனை நடைபெறும்.

பாவ சங்கீர்த்தனம்:

            ஒவ்வொரு நாளும் காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி பாவ சங்கீர்த்தனம் கேட்கப்படும்.

திருவிழா திருப்பலிகள்:

             14/01/2014 செவ்வாய்க்கிழமையன்று திருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெறும்.

        காலை                                                        மாலை

நேரம்      மொழி                                           நேரம்      மொழி  
05.00         (தன்னார்வத் தொண்டர்கள்)                        01.00          கன்னடம்
05.45         தமிழ்                                                02.00          மலையாளம்
07.00         ஆங்கிலம்                                      03.00          கொங்கனி
08.30         தமிழ்                                                04.00          ஆங்கிலம்
10.00         கன்னடம்                                        05.00          தமிழ்
11.30         தமிழ்

                     மாலை 06.00 மணிக்கு பேராயர் பேரருட்திரு. பெர்னார்ட் மோரஸ் அவர்களால் தேர் அர்ச்சிக்கப்பட்டு தேர்ப்பவனி நடைபெறும். தேர்ப்பவனியைத் தொடர்ந்து திவ்விய நற்கருணை ஆசீர் மற்றும் திருப்பலி நடைபெறும்.

தொடர்புக்கு:

குழந்தை இயேசு திருத்தலம்,
விவேக் நகர்,
பெங்களூரு-560047.
தொலை பேசி எண்: 080 25301206